பிப்ரவரி 18, 2021
எங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்ய WhatsApp பயனர்களை நாங்கள் எவ்வாறு கேட்டுக் கொள்வோம் என்பது குறித்த மாற்றப்பட்ட திட்டங்களை இன்று பகிர்ந்து கொள்கிறோம். இந்தப் புதுப்பிப்பு குறித்து தவறான தகவல்களைப் பெருமளவில் நாங்கள் முந்தைய காலகட்டங்களில் எதிர்கொண்டோம். அனைத்து விதமான குழப்பங்கள் குறித்தும் தெளிவுபடுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறோம்.
இதை நினைவூட்டும் விதமாக, WhatsApp-இல் ஒரு பிசினஸுடன் உரையாடுவதற்கோ அவர்களிடம் ஷாப்பிங் செய்வதற்கோ புதிய வழிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம், இவை முற்றிலும் விருப்பத்தேர்விலானவை. தனிப்பட்ட செய்திகள் எப்போதும் முழு மறையாக்கம் செய்யப்படுவதால், WhatsApp-ஆல் கூட அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது.
நாங்கள் எவற்றையெல்லாம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம். முழு மறையாக்கத்தைக் காப்பதற்கு நாங்கள் இதுவரை எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். பயனர்களின் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம் என்று நம்புகிறோம். எங்கள் மதிப்புகளையும் அறிவிப்புகளையும் WhatsApp-இல் நேரடியாகப் பகிர, ஸ்டேட்டஸ் அம்சத்தைப் பயன்படுத்துகிறோம். இனிவரும் காலங்களில் எங்கள் எண்ணங்களை மேலும் தெளிவாக உணர்த்த இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம்.
வரும் வாரங்களில், பயனர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் படிக்கலாம் என்ற கூடுதல் தகவலுடன் ஒரு பேனரை WhatsApp-இல் காண்பிக்க உள்ளோம். எங்களுக்கு அனுப்பப்படும் குறைகளைத் தீர்க்க முயலும் நோக்கில் கூடுதல் தகவல்களையும் சேர்த்துள்ளோம். WhatsApp-ஐத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இந்தப் புதுப்பிப்புகளைப் படித்துவிட்டு ஏற்றுக்கொள்ளுமாறு பயனர்களுக்கு நினைவூட்டத் தொடங்குவோம்.
WhatsApp-ஐ எங்களால் எப்படி இலவசமாக வழங்க முடிகிறது என்பதைப் பயனர்கள் தெரிந்துகொள்வது முக்கியமானது என்றும் எண்ணுகிறோம். தினந்தோறும் லட்சக்கணக்கான பயனர்கள் ஒரு பிசினஸுடன் WhatsApp உரையாடலைத் தொடங்குகிறார்கள். தொலைபேசியில் அழைப்பது அல்லது மின்னஞ்சல்களில் தகவல் பரிமாறிக்கொள்வதை விட இவ்வாறு செய்வது எளிதானதாகும். WhatsApp-இல் வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்காக பிசினஸ்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம், பயனர்களிடம் அல்ல. ஷாப்பிங் தொடர்பான சில அம்சங்களுக்கு Facebook பயன்படுத்தப்படுவதால், பிசினஸ்கள் தங்கள் சரக்கு இருப்புகளை எல்லாச் செயலிகளுக்கும் ஒட்டுமொத்தமாக நிர்வகித்துக் கொள்ளலாம். WhatsApp-இல் நாங்கள் கூடுதல் தகவல்களை நேரடியாகக் காட்டுவதால், தொடர்புடைய பிசினஸ்களுடன் பயனர்கள் உரையாட விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்தக் காலகட்டத்தில், மற்ற செயலிகள் என்னென்ன அம்சங்களை வழங்குகின்றன என்பதையும் பயனர்கள் பார்க்கக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். பயனர்களின் செய்திகளைத் தங்களால் பார்க்க முடியாது என்று கூறி எங்கள் போட்டியாளர்களில் சிலர் தப்பிக்க முயல்கின்றனர். முழு மறையாக்கத்தை இயல்பாக ஒரு செயலி வழங்கவில்லை என்றால், அவர்களால் உங்கள் செய்திகளைப் படிக்க முடியும் என்றே அர்த்தம். WhatsApp-ஐ விடக் குறைந்த அளவிலான தகவல்களைப் பிற செயலிகள் அறிந்திருப்பதால் தங்கள் செயலிகளே சிறந்தவை என்று அவர்கள் கூறுகிறார்கள். செயலிகள் நம்பகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றே பயனர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று நாங்கள் நம்புகிறோம், குறைந்த அளவிலான தகவல்கள் WhatsApp இடம் இருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டாலும் கூட. நாங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் கவனமாக இருப்பதற்கான முயற்சிகளைச் செய்கிறோம். குறைந்த அளவிலான தகவல்களை மட்டுமே தெரிந்துகொண்டு, இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான புதிய வழிகளைத் தொடர்ந்து உருவாக்குவோம்.
குறைகளுக்குத் தீர்வு காணச் செய்ய எங்களுக்கு உதவிய, உதவ முன்வரும் அனைவரையும் மிகவும் பாராட்டுகிறோம். இதற்கான எங்கள் முயற்சியை 2021ஆம் ஆண்டில் தொடர்ந்து மேற்கொள்வோம். இனிவரும் வாரங்களிலும் மாதங்களிலும் கூடுதல் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.